Monday, September 19, 2011

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் இணையம்


வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் இணையம்
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 10:24.47 மு.ப GMT ]
சோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.
காரணம் சோர்பஸ்டர் வீட்டு வேலைகளையை திட்டமிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வேலைகளை திட்டமிட்டு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இதற்கெல்லாம் ஒரு இணையதளமா? என்று ஆச்சர்யப்பட்டாலும் சரி அல்லது இது போன்ற ஒரு தளத்தை வீட்டு வேலைகளை திட்டமிடுவதை எளிமையாக்கும் தளத்தை தான் எதிர்பார்த்தேன் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் சரி, சோர்பஸ்டர் இனிமையான இணையதளம் தான்.
ஒவ்வொரு வீட்டிலும் தான் எத்தனை விதமான வேலைகள் இருக்கின்றன. பாத்திரம் துலக்குவது, துணி மணிகளை துவைப்பது, வீட்டை தூய்மையாக்குவது, உணவு தயார் செய்வது, தோட்ட செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவது, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என வீட்டுக்கு வீடு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன.
வேலைகள் எத்தனை இருந்தாலும் சரி அவற்றை நிர்வகிக்கும் பொருப்பு அநேகமாக இல்லத்தலைவியின் தலையில் தான். நிர்வகிப்பு என்பதற்கு செய்து முடிப்பது என்றும் வைத்து கொள்ளலாம்.
வேலைகளை பிரித்து கொடுக்க நினைத்தாலும் அம்மாவோ, மனைவியோ ஒன்று குடுமப உறுப்பினர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும் அல்லது அதட்டி கொண்டிருக்க வேண்டும். இல்லை ஒருவரும் வேலையை பகிர்ந்து கொள்வதில்லை என்று புலம்பி கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு மாறாக அழகாக சார்ட் போட்டு வீட்டு வேலைகளை பட்டியலிட்டு யார் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். அதை தான் சோர்பஸ்டர் செய்கிறது.
இந்த தளத்தின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டில் உள்ள வேலைகளை அட்டவனை போட்டு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு முதலில் உறுப்பினராக சேர வேண்டும் .அதன் பிறகு இரண்டு விதமாக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள துவங்கலாம்.
முதலில் வீட்டில் உள்ள வேலைகளை பட்டியலிடலாம். வேலைகள் என்னும் பகுதியில் கிளிக் செய்து அதில் ஒவ்வொரு வேலையாக சேர்த்து கொண்டே இருக்கலாம்.
அடுத்த வேலை இந்த வேலைகளை வீட்டில் உள்ளவர்களுக்கு பிரித்து தருவது தான். இதற்காக நபர்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்த்து அவர்களுக்கான வேலைகளை ஒதுக்குவது தான்.
உதாரணத்திற்கு காலை உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்கலாம். காய்கறிகள் வாங்கி வரும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.
எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு எல்லாவற்றையும் பிரித்து கொடுத்த பின் இந்த அட்டவணையை அச்சிட்டு வைத்து கொள்ளலாம். இந்த அட்டவணையின் படி வேலைகளை செய்து முடிக்க வற்புறுத்தலாம். மின்னஞ்சல் மூலம் வேலைகளை நினைவூட்டலாம். இந்த அட்டவணையை கொண்டே வேலைகளை செய்து முடித்துள்ளனரா என்று சரி பார்க்கலாம்.
எப்போது வேண்டுமானாலும் புதிய வேலைகளை சேர்க்கலாம், வேலையை மாற்றி தரலாம். ஒவ்வொரு கட்டத்திலும் கணித அட்டவனை போல கூடுதல் அம்சங்கள் எட்டிப்பார்ப்பது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் உண்மையில் இந்த அம்சங்களே மிகவும் சுவாரஸ்யமானவை. பயனுள்ளவை.
உதாரணத்திற்கு ஒரு வேலையை குறிப்பிட்ட பின் அந்த வேலை கடினமானதா, எளிதனாதா, மிகவும் எளிதனாதா போன்ற அம்சங்களை குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதே போல அந்த வேலையை தினமும் செய்ய வேண்டுமா அல்லது வாரத்தில் எந்த நாளில் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
முதல் பார்வைக்கு இந்த அம்சங்கள் என்னட இது வேலையை ஒதுக்குவதே வேலையாக போச்சே என்று அலுத்து கொள்ள வைக்கலாம். ஆனால் பழக பழக இந்த அம்சங்கள் திட்டமிடலை நியாமானதாகவும் சுவாரஸ்யமாகவும் மேற்கொள்ள என்பது புரிந்துவிடும்.
காரணம் கடினமான வேலைகளை ஒருவர் தலையிலே கட்டிவிடக்கூடாது அல்லவா? அதே போல வேலைகளை செய்பவர்கள் அவற்றின் தன்மையை உணர்ந்திருப்பது நல்லது தானே. அது மட்டும் அல்ல வேலைகளுக்கு பரிசு பொருளும் கொடுத்து கொள்ளலாம் என்பதால் இந்த மதிப்பீடு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அதே போல அதிக வேலை செய்பவர்களுக்கு சில நாட்கள் எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கலாம்.முக்கிய வேலைகள், தினசரி வேலைகள் என்றும் வகைப்படுத்தி கொள்ளலாம். வேலைகளை டைப் செய்யும் போதே அவற்றின் வகைகள் தோன்றிவிடுகின்றன. அவற்றில் இருந்து அப்படியே தேர்வு செய்து கொள்ளலாம்.
கணவன் மனைவி இரண்டு பேர் கோன்ட குடும்பம் முதல் கூட்டு குடும்பம் வரை இந்த சேவையை பயன்படுத்தி வீட்டு வேலைகளை பிரித்து கொள்ளலாம். அறை எடுத்து தங்கியிருக்கும் நண்பர்கள் கூட தங்களுக்குள் இப்படி வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் மற்றொரு சிறப்பம்சம் இதன் சமுக தன்மை.அதாவது இதில் உள்ள மற்ற உறுப்பினர்களின் வேலை அட்டவணையை பார்த்து பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. மற்ற குடும்பங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வதை பார்ப்பதன் மூலம் வீடு வேலையை பகிர்தலுக்கு தேவையான ஊக்கத்தை பெறலாம்.
வேலைகள் பகிர்தல் குறித்த புதிய வழிகளையும் கற்று கொள்ளலாம். அவர்களோடு தொடர்பு கொண்டும் பேசலாம். நட்பை வளர்த்து கொள்ளலாம். வேலைக்கான வழிகளை பரிமாறிக் கொள்ளலாம்.
இந்த தளத்தின் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டும் குறிப்புகள் இடம் பெறுவது தான்.வீட்டு வேலைகலை ஜனநாயகமயமாக்கும் சூப்பர் தளம்.

No comments:

Post a Comment