Wednesday, October 27, 2010

'பேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி

பிரபல சமூக வலைபின்னல் தளமான 'பேஸ்புக்', கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி வருவதாக 'டெக்கிரன்ச்' இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூன்றாம் நபர் வன்பொருளில் இயங்குவதற்கான இயங்குதளத்தினை ( ஒபரேடிங் சிஸ்டம்) 'பேஸ்புக்' தயாரித்து வருகின்றதென அத்தளம் குறிப்பிட்டிருந்தது.

கூகுளின் 'அண்ரோயிட்' இயங்குதளத்தினைப் போன்ற ஒரு முயற்சியில் 'பேஸ்புக்' இறங்கியிருக்கலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுளின் 'அண்ரோயிட்' கையடக்கத் தொலைபேசிகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கையடக்கத் தொலைபேசியானது தனது சமூக வலைப்பின்னலை அடிப்படையாக கொள்ளவுள்ளதாகவும், இதன் மூலம் பாவனையாளர்கள் இலகுவாக 'பேஸ்புக்'கினை உபயோகிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் சிறப்பம்சங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளன. எனினும் மேற்படித் தகவல் வதந்தியெனவும் தாம் அவ்வகையான இரகசிய நடவடிக்கை ஒன்றில் ஈடுபடவில்லையெனவும் 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி பேஸ்புக் அவ்வாறு கைத்தொலைபேசியினை வெளியிடுமாயின் அது பெரிய வரவேற்பைப் பெறும் சாத்தியமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் மொத்த 'பேஸ்புக்' பாவனையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனுக்கும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

தானாக நிறம் மாறும் நவீன ஆடை!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. இவ்வாடை ' பிசியூடோமோர்ப் ' என அழைக்கப்படுகின்றது.

' பிசியூடோமோர்ப் ' இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உடம்புப்பகுதி வெள்ளை நிறத்தால் ஆனது. மற்றைய பகுதி மெல்லிய குழாய்களினால் ஆனது.

இவ்வாடையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நிறச் சாயங்கள் ஆடைகளுக்குச் செலுத்தப்படுகின்றன. இச்சாயங்களின் மூலம் ஆடை, பலவித நிறங்களில் தோற்றமளிக்கின்றது.

இதனைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் சேர்க்கிட் 9 வோல்ட் மின்கலங்களால் வலுவூட்டப்படுகின்றன.

நிறச்சாயங்கள் தன்னிச்சையாக ஆடைகளின் மீது செலுத்தப்படுவதால் புதுவிதமான டிசைன்களில் ஆடைகள் காணப்படுவதாக இதனை உருவாக்கியுள்ள 'அனொவுக் விப்ரச்ட்' தெரிவிக்கின்றார்.

நவீன ஆடை இயக்கப்படும் முறையினை இக் காணொளியில் காணமுடியும்

http://www.youtube.com/watch?v=R06oTwsABQ0&feature=player_embedded

பேஸ்புக்கின் ' தற்காலிக ' கடவுச் சொல் வசதி

சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password).

பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.

உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுப்பினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.

இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது.

கடந்தவாரம் பேஸ்புக் ' ரிமோட் லொக் அவுட்' வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் இவ்வசதியை அனைவரும் பெறக்கூடியதாகவிருக்கும். ___

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( உத்தியோகபூர்வமானது)

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

Download Skype 5.0 here

எவரும் கையாளக் கூடிய ' ரோபோடிக்' மென்பொருள்

'ரோபோடிக்' துறையில் பாரிய அறிவற்றவர்களால் கூட 'ஹியூமனொயிட்' (humanoid) என்றழைக்கப்படும் மனிதனைப் போன்ற ரோபோக்களை இயக்கக்கூடிய மென்பொருளைத் தாம் உருவாக்கியுள்ளதாக ஜப்பானின் பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது.

' கொரோனொயிட் ' ( Choreonoid ) என்றழைக்கப்படும் இம்மென்பொருளை 'ரோபோடிக் புரோகிராமிங்' அறிவற்றவர்கள் கூட உபயோகிக்க முடியும்.

உதாரணமாகச் சாதாரண 'கிரஃபிக் டிசைனர்' ஒருவராலேயே இம்மென்பொருளைக் கட்டுப்படுத்தமுடியும்.

கணினி மவுசின் ( Mouse ) உதவியுடன் ரோபோவின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இதன் மூலம் ரோபோவை பாய்தல், குதித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்விக்க முடிவதுடன், அதற்கு ஏற்பட்ட அதிர்வுகளையும் கணக்கிட முடியும்.

நமது பிரயோகங்கள் தவறெனில் இம்மென்பொருள் அதனைக் கட்டுப்படுத்தவும் தவறுவதில்லை.

இது 'ரோபோடிக்' துறையில் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றது.

அம்மென்பொருளின் மூலம் இயக்கப்படும் 'ஹியூமனொயிட் ரோபோ' தொடர்பிலான காணொளி :

2010 இறுதியில் 2 பில்லியன் இணையப் பாவனையாளர்கள்

இவ் வருட இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள்.

மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

அவ்வறிக்கையினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.