Tuesday, October 12, 2010

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் டீன் ஏஜ் ஐ தொட்டுவிட்டார்களா? அவர்களோடு பெற்றோர்கள் நீங்கள் எவ்வாறு பழகவேண்டும் என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
அதற்கான சிலவழிமுறைகள்

டீன்-ஏஜ் பிள்ளைகளின் முன்னால் சகட்டுமேனிக்குச் சண்டையிடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குள் விவாதங்கள் இருக்கலாம். அவை ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து மோதல்களானாலும், கடைசியில் ஒரு முடிவுடன் முற்றுப் பெறுவது அவசியம். இல்லையேல் பெற்றோரின் சண்டை, பிள்ளைகளைப் பாதிக்கும்.

மகளோ... மகனோ... குழப்பத்துடன் தென்பட்டால், முதலில் பெற்றோர் செய்ய வேண்டியது, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது. எந்த வேலை இருந்தாலும் ஓரமாகப் போட்டு, அவர்களை நிதானமாக, ரிலாக்ஸ்டாக விசாரியுங்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு தாருங்கள்.

'உலகம் முழுவதும் கெட்டுப் போனாலும் தன் குழந்தை பரிசுத்தமாக இருக்க வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தவிப்பு. அது தவறல்ல. அதற்காக குரூப் ஸ்ரடி, இன்ரநெட், போன் கோல் என்று எதற்கெடுத்தாலும் 'பிள்ளை கெட்டுப் போய்டுவானோ...' என்று கண்மூடித்தனமாகப் புலம்பாதீர்கள். டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் வெளிப்படையான உரையாடல் அவசியம்.

அவர்களின் விருப்பங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். 'இது தவறு, இது சரி, இதன் விளைவுகள் இவை' என்பதை 'பளிச்' என சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கருத்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் உறுதியும் குழந்தைகளுக்குப் புரிய வேண்டியது முக்கியம்.

குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே தொடர்ந்த உரையாடல்கள் மிக அவசியம். 'அம்மாகிட்ட சொன்னா... நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க...' என மகள் நினைக்குமளவுக்கு அம்மா நடந்து கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே இந்த பிணைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.

அதற்காக 'அட்வைஸ் சொல்கிறேன் பேர்வழி' என நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். முதலில் அவர்களைப் பேசவிட்டு, அந்தச் சூழலை அலசி, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 'என்ன சொன்னாலும் அம்மா இப்படித்தான் சொல்வாங்க' என ஒரு மைண்ட் செட் அவர்களிடம் உருவாகிவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் பகிர்தலுக்கே வரமாட்டார்கள்.

எந்த விஷயத்துக்கும் 'இது பற்றி ஏற்கனவே பேசியாச்சே...' என்று முற்றுப்புள்ளி வைக்க எண்ணாதீர்கள். சில விஷயங்களை அடிக்கடி பேச வேண்டும். கெட்ட விஷயங்களைத் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறது உலகம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அதற்கேற்ப நல்ல விஷயங்களை அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பதும் அவசியம்.

உங்கள் குழந்தை செய்யக் கூடாத ஒரு தவறைச் செய்திருந்தாலும்கூட, உங்கள் குழந்தைக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள். இது, 'அம்மா, அப்பா எப்பவும் உனக்கு துணையா இருப்போம்' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டுமே தவிர, 'வரட்டும் பார்த்துக்கலாம்டா...' என்று அவர்களின் தவறை ஊக்குவிப்பதாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சினிமாவுக்குப் போவது, அவுட்டிங் போவது சின்னச் சின்ன டீன் தேவைகளை, குறும்புகளை அனுமதியுங்கள். ஆனால், சிகரெட்... தண்ணி போன்றவையெல்லாம் தெரிய வந்தால், முளையிலேயே கிள்ளிவிடுங்கள். எதை அனுமதிக்கலாம், எது அறவே கூடாது என்பதில் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும்.

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு அதீத பொறுமை அவசியம். திடீரென கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பிள்ளைகளை நிதானத்துடன் அணுகுங்கள். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டால் போச்சு. காரியம் கெட்டு விடும். டீன் பருவத்தில் கலவையான உணர்வுகள் மேலோங்கும். அதற்கெல்லாம் காரணம், அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது திடீர் விசிட் கொடுங்கள். ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுங்கள். பிள்ளைகளின் தேவை என்ன என்பதை கவனியுங்கள்.

பிள்ளைகளைச் சமூகக் குழுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசுங்கள். நல்ல பொழுதுபோக்குகளுக்கு உற்சாகமூட்டுங்கள். அடிக்கடி வெளியே சுற்றுலா செல்லுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் கேட்டறியுங்கள். இதெல்லாம் டீன்-ஏஜ் பருவத்தை வளமாக்கும்.

உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மேல் ஒருவேளை உங்களுக்குத் திருப்தியில்லை என்றாலும், ''இனிமே அவன்கூட சேர்ந்து சுற்றுவது தெரிஞ்சால் என்ன பண்ணுவேன் பாரு...'' என்று அதை அவர்களிடம் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். அந்த எதிர்ப்பு, அவர்களின் நட்பை இன்னும் நெருக்கமாக்கும். மாறாக, உங்கள் பிள்ளைக்கு அந்த நண்பரை பிடிப்பதற்கான காரணங்களை இதமாகப் பேசி தெரிந்துகொண்டு, உங்களுக்கு அந்த நண்பரை பிடிக்காததற்கான காரணத்தையும் நிதானமாக உங்கள் பிள்ளையிடம் தெரிவியுங்கள். எந்த தரப்பின் காரணங்கள் வலுவாக இருக்கிறதோ, அதன்படி முடிவெடுங்கள்.

இன்றைய இளசுகளின் கவச குண்டலம், செல்போன். எனவே, அதைப் பார்த்து டென்ஷன் ஆகாதீர்கள். அவர்கள் வீட்டில் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை முதலில் லிமிட் செய்யுங்கள். பின், அதை தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மெல்ல மெல்ல சொல்லிக்கொடுங்கள்.

வரும் முன் காப்பது நலம். செல்போன் வாங்கிக்கொடுத்து, நெட் கனெக்ஷன் கொடுத்து, பைக் வாங்கிக்கொடுத்து என அனைத்தையும் செய்துவிட்டு, பின் அதில் அவர்கள் பொழுதை வீணாக்குவதை சொல்லிப் புலம்பி பயனில்லை. எனவே, உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிக்கொடுங்கள்... அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் அல்ல!

டீன்-ஏஜ் பிள்ளைகளின் ரகசிய சிநேகிதன், கண்ணாடி. அதற்காக, ''எப்பா பார்த்தாலும் கண்ணாடி முன்னாலயே நின்னுட்டு...'' என்று அவர்களை பழித்து பல்லவி பாடாதீர்கள். அவர்களது வயதையும், நிலையையும் புரிந்து கொண்டு இது போன்ற விஷயங்களில் சில வேளைகளில் அவர்களோடு கூடவே இருந்தும், சில நேரங்களில் கண்டும் காணாமல் நாசூக்காக நடந்து கொண்டால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்'தான்.

பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி குறித்து பெற்றோர் பயப்படக் காரணம், அதுகுறித்த தெளிவு இல்லாததுதான். பாலியல் கல்வியில் உடல் ஆரோக்கியம், தகாத உறவுகள், அதன் விளைவுகள், அதனால் பாதிக்கப்படப் போகும் எதிர்காலம், கலாசாரம், குடும்ப சூழல் என அனைத்தும் ஆழமாக உணர்த்தப்படும். பாலியலில் டீன்-ஏஜ் பருவத்தினருக்கு எழும் கிளர்ச்சியைத் தாண்டி அதிலுள்ள விளைவுகளையும் புரிய வைப்பதே பாலியல் கல்வியின் நோக்கமாக இருக்கும். எனவே, பதற்றம் வேண்டாம் பெற்றோர்களே!